ஏழைகள் நிலவில் இருந்தால் அங்கும் சென்று அவர்களுக்குச் சேவை செய்யத் தயார் என்று சொன்னவர் அன்னை தெரசா. அதற்காகவே வாழ்வின் வசந்தங்களை எல்லாம் துறந்துவிட்டு, வாடிய மக்களுக்காக உழைக்கத் தயாரானவர்.
உலக மக்கள் சந்திக்கும் துன்பங்களையும் துயரங்களையும் போக்குவதற்கு தெரசா முற்பட்டபோது அவருக்குத் துணையாக வந்த நண்பர்கள் ஐவர். அன்பு, அகிம்சை, கருணை, எளிமை, பக்தி.
தெரசா மேற்கொண்ட சேவைப் பயணம் என்பது சுகமான ராஜபாட்டை அல்ல. கடுமையான முள்வழிப்பாதை. அந்தப் பாதையில் அவர் எதிர்கொண்ட சவால்கள் அநேகம். துயரங்கள் அதிகம். அவற்றை எல்லாம் தாண்டித்தான் பிரம்மாண்டமான மிஷனரியைக் கட்டமைத்தார். அதைவிட முக்கியமாக, ஏழை மக்களின் மனத்தில் பிரம்மாண்டமாக உயர்ந்தார்.
உயரங்களுக்குச் செல்லும் எவருமே விமரிசனத்துக்குத் தப்புவதில்லை, தெரசா உள்பட. சேவை என்ற பெயரில் கிறித்தவ மதமாற்றத்தில் ஈடுபட்டார் என்பது தெரசாவின் மீது சுமத்தப்பட்ட ஆகப்பெரிய குற்றச்சாட்டு. தெரசா உயிருடன் இருந்த காலத்திலிருந்து இன்றுவரை தொடரும் விமரிசனம் இது.
அன்னை தெரசாவின் ஆன்மிக, மானுட சேவையின் ஒவ்வொரு அங்குலத்தையும் விரிவாக எடுத்துச் செல்லும் நூலாசிரியர் பா. தீனதயாளன், தெரசாவின் மீது எழுப்பப்பட்ட சர்ச்சைகள் மீதும் வெளிச்சம் பாய்ச்சுகிறார்.
Tags: annai, therasa, அன்னை, தெரசா, ப. தீனதயாளன், Sixthsense, Publications