• அந்திராகம்-Anthiraagam
இத்தொகுப்பில் முக்கியமான இரண்டு கட்டுரைகளும் ஒரு திரைச்சித்திரமும் இடம்பெற்றுள்ளன. மூன்றுமே இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர்களுடையவை. கஸூவோ இஷிகுரோ வின் The Gourmet, BBC யில் ஒளிபரப்பான தொலைக்காட்சித் திரைப்படம். இஷிகுரோ பிறப்பால் ஜப்பானியர். சிறு வயதிலேயே பெற்றோர்களுடன் இங்கிலாந்தில் குடியேறிவிட்டவர். மரபான கீழைத்தேய மனதுக்கு மேலை நாட்டு கலாச்சாரம், அவர்களின் ரசனை, தேர்வு, வாழ்க்கைமுறை இவற்றோடு ஒருபோதும் இயைந்துவிட முடியாது என்பதற்கு இஷிகுரோவின் எழுத்துக்கள் உதாரணமாக இருக்கின்றன. அவருடைய பிரசித்தி பெற்ற, புக்கர் பரிசு பெற்ற The Remains of The Day வின் நீட்சியாகவே இந்த 'ருசிகர்' அமைந்துள்ளது. குந்தர் கிராஸ் ஜெர்மனியின் மனசாட்சி என்று அறியப்பட்டவர். ஹிட்லர் இழைத்த கொடுமைகளுக்காக உலகத்தின் முன்பு கூசிக் குறுகி நின்றிருந்த ஜெர்மானியர்களுக்கு குந்தர் கிராஸின் The Tin Drum பெரும் ஆறுதல் அளித்தது. ஜெர்மனியின் பாவக்கறைகளை கிராஸ் தனது படைப்புகளின் மூலம் அழித்து வந்தார். அரசியலிலும் ஈடுபட்டார். இவருடைய தேர்தல் பிரச்சாரம் ஜெர்மனியின் முதல் சோஷலிஸ்ட் தலைவரான வில்லி பிராண்ட் அதிபராவதற்கு பெரும் உதவியாக இருந்தது. ஆனால் குந்தர் கிராஸ் தனது அந்திமக் காலத்தில் ஒரு மிகப்பெரிய ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். அறியாத வயதில் ஹிட்லர் எழுப்பியிருந்த தேசியவெறியில் மயங்கி நாஜி படையில் சேர்ந்து போரில் ஈடுபட்டதாக அவர் தன்னிச்சையாக முன்வந்து ஒப்புக்கொண்டது இந்த மகா கலைஞனின் நேர்மைக்குச் சான்றாக இருந்தது. இத் தொகுப்பில் உள்ள அவரது கட்டுரை குந்தர் கிராஸின் Peeling the Onion நூலிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு பகுதி. 'அந்தி ராகம்' காப்ரியேல் கார்சியா மார்க்கேஸின் சுயசரிதை நூலான 'Living to Tell the Tale நூலில் அவருடைய பெற்றோர்களின் காதல் எவ்வளவு போராட்டங்களைத் தாண்டி வெற்றி பெற்றது என்ற சுவாரஸ்யமான கதையைச் சொல்லும் பகுதி. இவை கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கு முன் மொழிபெயர்த்தவை. இன்று இவற்றை வாசித்துப் பார்க்கையில் மொழிபெயர்ப்பு செயல்பாடுகளில் நான் அடைந்திருக்கும் மெலிதான மாற்றங்களை உணர முடிகிறது. சில விஷயங்களில் பிடிவாதம் அதிகரித்திருக்கிறது. சில அம்சங்களில் இளகியிருக்கிறேன். இப்போது புத்தகமாக வரும்போது சில வாக்கிய அமைப்புகளை மாற்றுவதற்கு எழுந்த இச்சையை அடக்கிக்கொண்டு அப்படியே அனுமதித்திருக்கிறேன். மொழிபெயர்ப்பு குறித்த பார்வைகள் காலந்தோறும் மாறிவருகின்றன. மொழிபெயர்ப்பாளனும் மாறிவருகிறான். மாறக்கூடாதவொன்று மூலப்படைப்புக்கும் படைப்பாளிக்கும் நேர்மையாக இருப்பது. அதில் வழுவாமல் இருக்கிறேன் என்பதே மனநிறைவு அளிப்பதாக உள்ளது. நூலாக்கம் பெறாமல் குவிந்திருக்கும் என்னுடைய பல கட்டுரைகள், மொழிபெயர்ப்புகளை சேகரித்துத் தருவதற்கு அவர்கள் தொடர்ந்து நச்சரித்து வந்ததால்தான் என் சோம்பலை மீறி இந்நூல் வெளிவருகிறது.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

அந்திராகம்-Anthiraagam

  • ₹150


Tags: anthiraagam, அந்திராகம்-Anthiraagam, ஜி. குப்புசாமி, வம்சி, பதிப்பகம்