மின்சாரம் இன்றைய வாழ்க்கைக்கு மிகவும் அவசியம். அந்த மின்தேவையை நிவர்த்தி செய்ய, நம் நாட்டில் அணுமின் நிலையங்களும் உலைகளும் அதிகப் படுத்தி வரும் இந்த வேளையில், அணுமின் நிலையங்களால் ஏற்படும் பிரச்னைகள், பாதிப்புகள், அபாயங்கள், அழிவுகள், விழிப்பு உணர்வு குறித்து தெளிவாக விளக்குகிறது இந்த நூல். அணுமின் நிலையங்கள், வெறுமனே மின்சாரம் தயாரிக்கும் உலைகள் மட்டும் அல்ல, அணு ஆயுதத் தயாரிப்போடும் தொடர்பு உடையவை. கண்ணும் கருத்துமாகக் காப்பாற்றப்பட வேண்டிய இந்த நிலையங்கள், நாட்டின் பாதுகாப்போடும், ராணுவக் கட்டமைப்புகளோடும் நேரடியாகப் பின்னிப் பிணைந்தவை. நம் சுற்றுச்சூழலில் இயங்கும் அணு உலைகள், கதிரியக்கம், அதன் விளைவுகள், ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது அணு உலைகள் வெடித்து மக்கள் கதிர்வீச்சுக்கு உள்ளான பாதிப்பு... என அணுவின் ஆதி முதல் அந்தம் வரை அத்தனை விசயங்களையும் அணு அணுவாக, விறுவிறுப்பாக விவரித்துள்ளார் நூலாசிரியர் சுப.உதயகுமாரன். மன்ஹாட்டம் திட்டம் தொடங்கி, உலகின் மிகவும் கொடூர ஆயுதமான அணுகுண்டை தயாரித்த ராபர்ட் ஓபன் ஹெய்மர், உலகின் முதல் அணுசக்தி நிலையத்தை வடிவமைத்த என்ரிகோ ஃபெர்மி, அணுகுண்டின் மாறாத அடையாளமான ஹிரோஷிமா, நாகசாகி... என அணுசக்தித் துறையின் ஆணிவேர்களை அலசி எழுதியிருக்கிறார். ஜூனியர் விகடனில் தொடராக வெளிவந்த ‘அணு ஆட்டம்’, கூடங்குளம் போராட்டத்தை உலகறியச் செய்தது. உலகின் பல நாடுகள் அணுமின் உலைகளை மூடிவரும் இந்த வேளையில், அணுமின் உலைகளால் ஏற்படும் ஆபத்துகளையும், அணுக் கழிவுகளிலிருந்து வரும் கதிவீச்சுகளால் ஏற்படும் அழிவுகளையும் அவற்றின் நச்சுத்தன்மையையும் அறிய உதவுகிறது இந்த நூல்.
Tags: anu, aattam, அணு, ஆட்டம்!, சுப. உதயகுமாரன், விகடன், பிரசுரம்