"பாண்டவர் கதையில முக்கியமான காட்சியமாக மூன்று காட்சியங்கள் இருக்கின்றன” என்று பீடிகை போட்டுக் கொண்டு ஆரம்பிக்கிறாள் பொம்மக்கா. ‘கிட்ண உபதேசம்‘ ஒரு காட்சியம். அதில் அறத்துக்கும் அதிகாரத்துக்குமான உறவுநிலையை எந்தவித ஆசாபாசங்களுமில்லாமல் மனுச வாழ்வோடு பொருத்திப் பார்க்கும் முக்காலமறிந்த சொல்லாகப்பட்டது காட்சியமாக விரிகிறது.
இன்னொரு காட்சியமான ‘விசத்தடாகத்தில்’ தண்ணித் தாகத்துக்கு வரும் தருமனிடத்தில் எமதர்மராஜனானவன், மனுச வாழ்க்கையில் ஒளிந்திருக்கும் அர்த்தத்தை விடுவிக்கக் கேட்கும் புதிர்க் கேள்விகளுக்கான விடைகளை, ஊழ்வினைக்கும் மோட்சத்துக்குமான உழவோட்டமாகச் சாலடிக்கிறது.
மூணாவது காட்சியானது. ‘பாஞ்சாலி துகிலுரிதல்’. இதில் மனுசனுக்கும் விலங்குக்கும் இடையில் தூரியாடும் ஞாயங்களும் நெறிமுறைகளும் மனுச உடம்புமேல் தாக்கும் வன்மமாக, மேலெங்கும் அடித்துப் போட்ட வாதையில் வலி கூட்டும்... என்று பொம்மக்கா பாரதக் கதையை மீட்டுருவாக்கம் செய்து பார்க்கிறாள்.
Tags: bommakka, பொம்மக்கா, கௌதம சித்தார்த்தன், எதிர், வெளியீடு,