இந்த நாவல் 1914 தொடங்கி 1918 வரையிலான காலம் வரை தன் எல்லைகளை வரையறுத்துக் கொண்டுள்ளது. அது முதல் உலகப் போரின் காலம். நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவு நமது கிராமங்கள் மற்றும் நகரங்களில் இருந்து போருக்குப் போனவர்கள் ஏராளம்.
வரலாறுகளில் இந்தியர்களின் பெரும் பங்களிப்பு மறைக்கப்பட்டது. பிரிட்டிஷ் என்ற ஒற்றை அடைமொழி மட்டுமே தரப்பட்டது. அந்த அடையாளம் வெள்ளையர்களுக்கானது. இந்தியர்கள் அதில் அடங்கவில்லை. வரலாற்றிலிருந்து மட்டுமல்ல ஏதோ ஒரு வகையில் நம் நினைவுகளிலிருந்தும் அந்த பங்களிப்பை நீக்க வேண்டும் என அவர்கள் விரும்பினர். ஏறக்குறைய அதில் அவர்கள் வெற்றியும் பெற்றனர்.
போரிலிருந்து திரும்பியவர்களுக்கு உரிய அங்கீகாரம் ,உதவிகள் கூட மறுக்கப்பட்டது. போர் முடிந்த பின்பு போர்களத்தில் இறந்தவர்களின் கல்லறைகள். சவக் குழிகள் தோண்டி எடுக்கப்பட்டது. மீண்டும் மரியாதையுடன் மறு புதைப்பு நடத்தப்பட்டது. அந்த மரியாதை கூட இந்திய படை வீரர்களுக்கு கிடைக்கவில்லை.
போருக்கு ஒருவனை அனுப்பி வைக்க ஒரு சமூகத்தில் பல தரப்பட்ட நியாயங்கள், கதைகள், பெருமைகள் கட்டமைக்கப்படுகின்றன. அது சாகசத்தின் வெளிப்பாடாகவும் தேசபக்தியின் வடிவமாகவும் நிலை நிறுத்தப்படுகிறது. எல்லாக் காலத்திலும் அவைகள் ஒன்று போலவே உள்ளன. ஆனால் களம் வேறு வகையான காட்சிகளைக் காட்டுகிறது. போருக்குப் போய் வந்தவனிடம் கடைசியாக எஞ்சி நிற்கும் கேள்வி போர் என்பது எதற்காக என்பதுதான். அன்றைய மெசபடோமியா என்ற இன்றைய ஈராக்கில் பாயும் டைகரிஸ் எனும் நதி அந்தப் பெரும் போரின் சாட்சியமாய் வாழ்ந்து பாய்கின்றது. அவள் ஆயிரக்கணக்கான இந்திய போர் வீரர்கள் மற்றும் கணக்கில் வைக்கப்படாத தொழிலாளர்கள் என்று கிராமத்திலிருந்து போரின் போது உடன் இருந்த இந்தியக் கூலிகளின் கதைகளை அறிந்தவள். சலசலக்கும் அந்த டைகரிஸ் நதியின் ஓசையில் அந்த கதைகளை நீங்கள் கேட்கக் கூடும்.
Tags: daigaris, டைகரிஸ், ச. பாலமுருகன், எதிர், வெளியீடு,