ஹரித்ரா நதி நாஸ்டால்ஜியா என்ற நனைவிடைத் தோய்தல் எப்போதும் வசீகரமானது. எழுத்தாளரும் வாசகரும் சேர்ந்து அமர்ந்திருக்கும் பள்ளிக்கூட வகுப்பு மர பெஞ்ச் அது. உத்தமதானபுரம் பற்றி எழுதி ‘என் சரித்திரம்’ என்ற தம் வரலாற்றைத் தொடங்கிய தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யரும், தாம் பிறந்த சிவகங்கை பற்றி எழுதிய கவியோகி சுத்தானந்த பாரதியாரும், வலங்கைமான் குறித்து எழுதிய ரைட் ஹானரபில் ஸ்ரீனிவாச சாஸ்திரியாரும், யாழ்ப்பாணம் பற்றிக் கட்டுரை வடித்த எஸ்.பொன்னுதுரையும் சந்திக்கும் காலம், இடம் கடந்த வெளி இந்த பிள்ளைப் பருவ நினைவுப் பரப்பு. பின்னாட்களில் சுஜாதாவின் ‘ஸ்ரீரங்கத்துத் தேவதை’யில் இந்த ழானர் (எஞுணணூஞு) புத்துயிர் பெற்றது. எவ்வளவு எழுதினாலும், எவ்வளவு படித்தாலும் நினைவுகளை அசைபோட்டு நடக்கும் உலா அலுப்பதே இல்லை. நானும் எழுதியிருக்கிறேன். இப்போது பளிச்சென்று ஒளிரும் நட்சத்திரமாக ஆர்.வி.எஸ், மன்னார்குடி நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார். பொங்கிக் கரை புரண்டு வரும் காவிரி போல நினைவலைகள் தன் பதின்ம வயதைத் தொட்டுத் தொட்டுத் திரும்ப, நண்பர் ஆர்.வி.எஸ் இந்தப் புத்தகத்தில் நனவிடைத் தோய்ந்திருக்கிறார். 1980-களின் மன்னையைத் தெப்பம் போல் ஹரித்ராநதியில் மிதக்க விட்டுக் காலப் பிரவாகத்தில் முன்னும் பின்னும் சுற்றி வந்து பழைய ஞாபகங்களை அகழ்ந்தெடுத்துப் பங்கு போட்டுக்கொள்கிறார் ஆர்.வி.எஸ். நானும் இதை வாசிக்கிற நீங்களும் கடந்து வந்த தெரு, நினைவில் விரியும் ஹரித்ராநதிக் கரை வீதி. ஆர்.வி.எஸ் கையைப் பிடித்துக் கொண்டு பராக்குப் பார்த்தபடி வலம் வருகிறோம். – இரா.முருகன்
Tags: , ஆர்.வி.எஸ், Haridhra, Nadhi/ஹரித்ரா, நதி