உலகில் தோன்றிய எந்தக் காவியமும் இலியட்டுக்கு நிகரில்லை என்று சொல்வோர் உண்டு. இயேசு பிறப்பதற்குச் சுமார் எழுநூறு ஆண்டுகளுக்கு முன் தோன்றிய கிரேக்க மகாகவி ஹோமரின் இரு பெரும் படைப்புகளுள் ஒன்று இது. ( இன்னொன்று ஒடிஸி). காதலும் வீரமும்தான் காவியத்தின் இரு கண்கள் என்பதை இலியட்டில் இருந்தே உலகம் கற்றது. ஒரு பெண்ணும், அவளுக்காக நடக்கிற யுத்தமும்தான் கதை என்று ஒருவரியிலும் சொல்லிவிடலாம்; ஒப்பற்ற பேரழகுப் புதையலான ஹோமரின் கவித்துவத்தைப் பக்கம் பக்கமாகவும் வருணிக்கலாம். ஆனால் இலியட்டை, வெறும் கதையாகப் பார்க்க இயலாது. சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு கவிஞனின் பார்வையில் அந்தக் காலகட்டத்து கிரேக்க நாகரிகம், வரலாறு, பெருமைகள் அனைத்தையும் ஏந்தி நிற்கும் ஒரு பொக்கிஷமாகவே இதைப் பார்க்க வேண்டும். சமூக உண்மைகளும் சரித்திரப் பதிவுகளும் கவியின் கற்பனையும் கலந்திருக்கும் விகிதம், கண்டிப்பாகப் பிரமிப்பூட்டக்கூடியது.
Tags: , நாகூர் ரூமி, ஹோமரின், இலியட்-Homarin, Illiad