ஒன்றிலிருந்து விடுபடுவதற்காகப் பிரிதொன்றை கெட்டியாகப்
பிடித்துக்கொள்கிறோம். இதுவரை புனைவில் அரிதாகக் கையாளப்பட்ட பங்குச்
சந்தை- இடபத்தின் களமாக இருப்பது சுவாரசியம். நுட்பமான யதார்த்தப் பதிவு.
உத்திரவாதங்களற்ற இன்றைய காலகட்டத்தில் பணம் தரும் பாதுகாப்பானது உடைத்து
சொல்லப் பட்டிருக்கிறது. எந்தப் பாத்திரத்திற்குள்ளும் புகுந்துகொண்டு
தன்னையிழக்கத் தயாரில்லை-நாவலின் இளம் நாயகி.பால்சொம்பில் தலைநுழைத்த
பூனையாகி விடுவோமோ என்கிற அச்சத்தில் சளைக்காது போராடுகிறாள். போலச்
செய்வதில் விருப்பமற்ற அவள், வாழ்க்கையைத் தன் வசத்தில் வாழ விழைகிறாள்.
அவ்வளவே.
தேடலானது தரிசனத்திற்கேயன்றி உடமைப் படுத்துவதற்கில்லை. ஒன்றைக் கண்டடைந்த
மனமானது, அடுத்ததைத் தேடித் தவிக்கிறது. அது கிடைத்ததும் – மற்றொன்று. இந்த
முடிவிலாத் தேடலே வாழ்வின் உயிர். அழகிய பெங்களூரு நகரப்
பின்னணியில்-இலகுவான தருணங்களிலும் மன அழுத்தங்களிலும் ரசமான
நிகழ்வுகளிலும் புகுந்து தேடிக்கொண்டே இருக்கிறார், கண்மணி.
Tags: idabam, இடபம், பா. கண்மணி, எதிர், வெளியீடு,