இடி அமின் கொன்றொழித்த மனித உயிர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தில் இருந்து ஐந்து லட்சம் வரை இருக்கும் என்று கணக்கிடுகிறார்கள். ரத்தம் குடிப்பார், மனித உடல் பாகங்களைத் தின்பார் என்பதில் தொடங்கி பல உறைய வைக்கும் குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. கொன்ற உடல்களை நீர்வீழ்ச்சியில் வீசி முதலைகள் பசியாற வைப்பார் என்று அவர் உதவியாளர் சாட்சியம் அளித்திருக்கிறார்.இடி அமின் குறித்த வதந்திகளும் கட்டுக்கதைகளும் அதிகம். என்றாலும், உகாண்டாவின் சர்வாதிகாரியாக அவர் ஆட்சியில் இருந்த காலத்தில் அரங்கேறிய அரசியல் அராஜகங்களுக்கும், இனப்படுகொலைகளுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் வலுவான ஆதாரங்கள் முன்வைக்கப்படுகின்றன. எதிர்ப்பவர்-களை மட்டுமல்ல, எதிர்க்க நினைப்பவர்களையும் அமின் அழித்திருக்கிறார். இந்தியர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். பொருளாதாரம் உருக்குலைந்தது. அவர் காலத்தில், அவருடன் பழகியவர்கள், பணியாற்றியவர்கள் அத்தனை பேரும் கொல்லப்பட்டார்கள் அல்லது காணாமல் போனார்கள். தப்பிப் பிழைத்தவர்கள் வெகு சிலரே. இடி அமின் செய்துகொண்டிருந்தது சீர்திருத்தமா, சீரழிவா என்பதை உகாண்டா மட்டுமல்ல உலகமும்கூட நீண்ட காலத்துக்குப் புரிந்துகொள்ளவில்லை. உண்மை தெரிய வந்தபோது, நிலைமை கைமீறியிருந்தது. ஒரு தேசம் அங்கே அழிந்துபோயிருந்தது.ஹிட்லர், முஸோலினி வரிசையில் மனித குலத்துக்கு பெரும் நாசம் விளைவித்த சர்வாதிகாரியான இடி அமினின் வாழ்க்கையை உகாண்டாவின் வரலாறோடு சேர்த்தே வழங்கிஇருக்கிறார் ச.ந. கண்ணன்.
Tags: , ச.ந. கண்ணன், இடி, அமீன்-Idi, Ameen