குறும்புத்தனமான ஓவியனைப்போல, பித்தம்கூடிய சிற்பக் கலைஞனைப்போல, குரூரமான மேஜிக் நிபுணனைப்போல… வாழ்வு, உடலைக் கலைத்துக் கையாள்கிறது. றாம் சந்தோஷ் அதை மொழிப்படுத்திப் பார்க்கிறார். ரத்தக்கறை படிந்த திரைச்சீலையின் பின்னணியில், மர்மச்சுவை மிகுந்த இசைக்கு நடுவே, காமாதீத விளையாட்டுகளை நடனிக்கும் உடல்கள் றாம் சந்தோஷின் கவிதைகளைக் கனவு காண்கின்றன. ‘அவன் உடல்போல் ஒரு தோதான பண்டம் வேறொன்றிருக்குமா ப்ரதர்’ எனக் கேட்குமொரு கவிதையின் போதையில் மொத்த வாசிப்பும் இடறுகிறது. காண, நுகர, தீண்ட, உண்ண, பெற - தர உடலன்றி யாதுமிலா உடலின் கவிதைகள் இவை. பால் பிளந்து… குருதி வழிய… இணைக்கென தனைப் புனைந்துகொள்ள ‘சீக்கிரம் சொல் நான் என் மொழியைப் பழக்க வேண்டும்’ என்று கேட்கிற உடலின் அவஸ்தை, தமிழ்க் கவிதைக்குள் புது வண்ணம். இக்கவிதைகளுக்குள் துள்ளுகிற உடலில், வெகுகாலமாகத் தமிழுக்குள் நீந்திக்கொண்டிருந்த தடயமும் உள்ளது.
- வெய்யில்
Tags: irandam, paruvam, இரண்டாம், பருவம், றாம் சந்தோஷ், எதிர், வெளியீடு,