சிவத்தம்பி மிகுந்த தன்னம்பிக்கைவாதி. நளினமான அவன் கை விரல்கள் பலவிதங்களிலும் வித்தை காட்டும். காகிதத்தில் பறவை செய்வான். சாக்கட்டியில் உருவங்கள் செதுக்குவான். நேர்த்தியாக ஓவியம் வரைவான். அன்பான மனைவி, அழகான மகள் மற்றும் ஏழ்மையினால் ஆனது அவனது சிறிய குடும்பம். நிரந்தரமாக ஒரு வேலை தேடுபவனுக்கு சோப்புத் தூள் தயாரிக்கும் கம்பெனியில் சேல்ஸ்மேன் வேலை கிடைக்கிறது. ஆனால் அதற்கு டெபாஸிட் பணம் ஐநூறு ரூபாய் தேவை. சிவத்தம்பி தன் கைகளின் சாதுர்யத்தால் தேவையான பணம் சேர்த்துவிடுகிறான். ஆனால் அதைக் கொண்டுபோய் கம்பெனியில் கட்டும்முன் ஒரு விபரீத சம்பவம் நிகழ்ந்துவிடுகிறது.