காதலோடு வேதங்கள் ஐந்து என்று சொல்லுங்கள்!’ - காதலுக்கு அழகிய கௌரவம் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் பழநிபாரதி. மெலடிகளில் மனதை வருடிக்கொடுத்த இந்தக் கண்ணாடிக் கவிஞன், கோபத்தையும் குத்தகைக்கு எடுத்து வைத்திருப்பவர் என்பது இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போதுதான் பலருக்கும் தெரியவரும். சமூகத்தின் பிரதிபலிப்பாக மிளிர்பவனே கலைஞன். இந்த வரையறையை உறுதி செய்கிறது பழநிபாரதியின் சமூகச் சாடல். மீசைக்கவிஞனின் பெயரைச் சுமப்பதாலோ என்னவோ... பன்னாட்டு ஊடுருவல் தொடங்கி பாலியல் மீறல்கள் வரை சாடித் தீர்க்கிறது பழநிபாரதியின் எழுத்து. ஒரு பாடலாசிரியராக வாழ்வியலின் மென்மையைப் பதிவு செய்யும் பழநிபாரதி தான் ஒரு பத்திரிகையாளர் என்பதை நிரூபிக்கவும் தவறவில்லை. இன்றைய வாழ்வின் இன்னல்களை, சமூக அவலங்களை, பன்னாட்டு நிறுவனங்களின் ஆக்கிரமிப்பால் உருமாறிப்போகும் பண்பாட்டு வாழ்க்கை முறைகளை, கலாசார சீரழிவுகளைக் காற்றின் கையெழுத்தாக நம் நெஞ்சுக்குள் உள்வாங்கும் மூச்சுக்காற்றுபோல் உணர்த்துகிறார் பழநிபாரதி. சமூகத்தின் பன்முகத் தளங்களிலும் ஊடுருவி, வீட்டு வேலை பார்க்கும் பெண்கள் தொடங்கி தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வரை பலருடைய பிரதிபலிப்புகளையும் இந்த நூல் பந்திவைக்கிறது. ஆற்றின் போக்கில் அடித்துச் செல்லப்படும் இலையாக, இந்தக் காற்றின் கையெழுத்து சகல திசைகளிலும் உங்களை இழுத்துச் செல்லும்!
Tags: katrin, kaiyezhuthu, காற்றின், கையெழுத்து, பழநிபாரதி, விகடன், பிரசுரம்