நாவலில் அதிகம் இடம்பெறும் சொல் பாண்டிச்சேரி. சில பெயர்களை தேடுவதற்காக நாவலில் கண்ணோட்டியபோது இச்சொல் மீள மீள கண்ணில்பட்டது. பல அத்தியாயங்களின் தொடக்கமாக பாண்டிச்சேரி என்ற பெயரே உள்ளது. எழுத்தாளன் எங்கெங்கோ சுற்றினாலும் என்னென்னவோ கற்றுக் கொண்டாலும் அவன் மீள மீள எழுதுவது தன்னுடைய பால்யத்தின் நினைவுகளாகவே இருக்கின்றன. தான் எழுத வேண்டியவை குறித்த போதத்தை எழுத்தாளன் தன்னுடைய தொடக்க நாட்களிலேயே உருவாக்கிக் கொள்வது அரிதானது. அரிசங்கர் தன்னுடைய முதல் நாவலில் இருந்தே பாண்டிச்சேரியை விதவிதமாக சொல்லிப் பார்க்கிறார். ஒரு ஊரின் நினைவு அவ்வூரை எழுதும் எழுத்தாளருடன் இணைந்து எழுவது எழுத்தின் வெற்றிகளில் ஒன்று. அரிசங்கர் என்ற பெயர் பாண்டிச்சேரியுடன் இணைந்து நினைவில் நிற்பதை மாகே கஃபே நாவல் உறுதி செய்கிறது.