அடக்குமுறையும் மிருகத்தனமும் தீராத அடிமைத்தனமும் நிறைந்தது சீனர்களின் வரலாறு. கிட்டத்தட்ட நான்காயிரம் ஆண்டு கால மன்னர் ஆட்சி. தொடர்ந்து பல நூற்றாண்டுகளாக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான் என்று மாறி மாறி சீனாவைத் துண்டாடிக் கொண்டிருந்த காலகட்டம் அது.சீனாவின் வரலாறை மாற்றியமைக்கும் உத்வேகத்துடன் தன் போர் முரசைக் கொட்டினார் மாவோ. என் பின்னால் வா என்று சீனாவைப் பார்த்து கம்பீரத்துடன் அழைப்பு விடுக்கும் தீரமும் துணிச்சலும் மாவோவிடம் இருந்தது. தேசமும் அவர் பின்னால் அணி திரண்டது.ஏகாதிபத்தியத்துக்கு எதிரான, நிலப்பிரபுக்களுக்கு எதிரான, அடக்குமுறைக்கு எதிரான மாபெரும் போராட்டம் மாவோவின் வழிகாட்டுதலுடன் தொடங்கியது. உழைக்கும் மக்களின் ஆட்சி முதன் முறையாக அங்கே மலர்ந்தது. சீன சரித்திரத்தில் எந்தவொரு தனி மனிதனும், எந்தவொரு கட்சியும், எந்தவொரு குழுவும் இதுவரை இத்தகைய சாதனையை நிகழ்த்தியது கிடையாது.மிக தெளிவான அரசியல் கொள்கை. தீர்க்கமான போர் தந்திரம். அசரவைக்கும் மக்கள் பலம். இந்த மூன்று ஆயுதங்களைப் பயன்படுத்தி மாவோ நிகழ்த்திக் காட்டியப் புரட்சி, சீனாவை முதன்முறையாக ஒருபுதிய திசையில் செலுத்தியது. சீன வரலாற்றில் மட்டுமல்ல உழைக்கும் மக்களின் வரலாற்றிலும் மாவோ ஒரு வீர சகாப்தம்.சீன புரட்சியை கண்முன் நிருத்தும் இந்நூல் உலக சரித்திரத்தில் மாவோவின் இடத்தை திட்டவட்டமாக சுட்டிக்காட்டவும் செய்கிறது.