எம்.ஜி.ஆர் என்ற மூன்றெழுத்து மந்திர வார்த்தையைக் கேட்டதும் மகுடிக்கு மயங்கும் பாம்பாக மாறிவிடுபவர்கள் தமிழக மக்கள். வெள்ளித்திரையிலும் சரி, அரசியல் களத்திலும் சரி, அவர் மட்டுமே வெல்லமுடியும்; அவரால் மட்டுமே வெல்ல முடியும் என்பது தமிழக மக்களின் பரிபூரண நம்பிக்கை. அதனால்தானோ என்னவோ, அவருடைய படத்துக்கு டிக்கெட் எடுக்கக் காட்டிய ஆர்வத்தை, அவருக்கு வாக்களிக்கும் விஷயத்திலும் கடைப்பிடித்தனர். அதுதான் அவரை வெற்றிக்கோட்டையின் உச்சியில் சென்று உட்காரவைத்தது.
சினிமா, கட்சி, அரசியல், ஆட்சி என்று தொட்ட துறைகளில் எல்லாம் வெற்றிக்கோட்டை எட்டிப்பிடித்தவர் எம்.ஜி.ஆர். அத்தகைய மனிதரின் வாழ்க்கையில் அரங்கேறிய அத்தனை அசைவுகளையும் முழுமையாகப் பதிவுசெய்வது என்பது அசாத்தியமான காரியம். அதைச் சாத்தியப்படுத்த பலரும் முயன்றிருக்கிறார்கள். ஆனால் அந்த முயற்சிகள் எல்லாமே “யானை தடவிய குருடன் கதை’ போன்றே முடிந்திருக்கின்றன. அதற்குக் காரணம், எழுத்தாளர்கள் அல்ல, எம்.ஜி.ஆரின் பிம்பம் அத்தனை உயரமானது.
என்றாலும், எம்.ஜி.ஆர் என்ற ஆகப்பெரிய ஆளுமையின் முழுப்பரிமாணத்தையும் கொண்டுவர ஒருவரால் நிச்சயம் முடியும் என்று என்னுடைய மனம் பல ஆண்டுகளாகச் சொல்லிக்கொண்டே இருந்தது. அவர், மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான பா. தீனதயாளன்.
பால்ய காலம் தொட்டு தமிழ் சினிமாவையும் எம்.ஜி.ஆரையும் உன்னிப்பாகக் கவனித்து வருபவர். எம்.ஜி.ஆரின் படங்களை தியேட்டரின் ஒரு ரசிகராகப் பார்த்து மகிழ்ந்தவர். வெளியே வந்ததும் அந்தப் படங்களை ஒரு பத்திரிகையாளராக மாறி, அவற்றின் நிறைகுறைகளை அங்குலம் அங்குலமாக விமரிசனம் செய்யக்கூடியவர். எம்.ஜி.ஆரின் எந்தப் படம், எந்தத் தியேட்டரில், எத்தனை நாள்கள் ஓடின என்பதை மனப்பாடமாக ஒப்பிக்கும் அளவுக்கு எம்.ஜி.ஆரை நேசிப்பவர்.
எம்.ஜி.ஆர் படத்துக்கான கதைகள் உருவாகும் பின்னணி தொடங்கி படத்தின் ஒவ்வொரு நகர்வு குறித்தும் பல விவரங்களை விரல் நுனியில் வைத்திருப்பவர்.
எம்.ஜி.ஆரின் படங்களைப் போலவே அவருடைய அரசியலையும் அவதானித்தவர். குறிப்பாக, அந்தக் காலத்துப் பத்திரிகைகளின் வெளியான அரசியல் தலைப்புச் செய்தி தொடங்கி சர்ச்சைக்குரிய கார்ட்டூன்கள் வரை அவரிடம் இருக்கும் நுணுக்கமான செய்திகள் அநேகம்.
அந்த வகையில், எம்.ஜி.ஆரின் திரை மற்றும் அரசியல் வாழ்க்கையைப் பதிவுசெய்ய பா. தீனதயாளனே பொருத்தமானவர் என்று முடிவுசெய்தோம். அவரிடமே ஒப்படைத்தோம். எம்.ஜி.ஆரை ஏந்திய நொடியில் இருந்து புத்தகம் நிறைவுபெறும் வரையிலும் அவர் செலுத்திய ஆர்வமும் உழைப்பும் அபாரமானவை.
இன்று புத்தகம் எம்.ஜி.ஆர் என்ற மனிதருக்கே உரித்தான அதிபிரம்மாண்டத்துடன் உருவாகியிருக்கிறது. பசித்த எம்.ஜி.ஆர், பரிதவித்த எம்.ஜி.ஆர், உழைத்த எம்.ஜி.ஆர், வீழ்ந்த எம்.ஜி.ஆர், வென்ற எம்.ஜி.ஆர், சாதித்த எம்.ஜி.ஆர், சறுக்கிய எம்.ஜி.ஆர், சர்ச்சைக்குரிய எம்.ஜி.ஆர், வாரிக்கொடுத்த எம்.ஜி.ஆர் என்று எம்.ஜி.ஆரின் அத்தனை அவதாரங்களையும் அழகுதமிழில் பதிவுசெய்திருக்கிறார் நூலாசிரியர் பா. தீனதயாளன்.
பிரபல வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா தன்னுடைய “இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு’ என்ற நூலின் முன்னுரையில், எம்.ஜி.ஆர் என்ற மிகப்பெரிய ஆளுமையின் முழுமையான வரலாறு இன்னமும் பதிவுசெய்யப்படாதது குறித்து வியப்பையும் வருத்தத்தையும் பதிவுசெய்திருந்தார்.
சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் வெளியீடாக வந்திருக்கும் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம் குஹாவின் ஏக்கத்தை மட்டுமல்ல, எல்லோருடைய ஏக்கத்தையும் தீர்க்கும். துளியும் சந்தேகம் வேண்டாம்.
Tags: mgr, எம்.ஜி.ஆர்., ப. தீனதயாளன், Sixthsense, Publications