உலகின் முதல் ஐந்து சிறந்த C.E.O-க்களில் ஒருவரான முகேஷ் அம்பானி, இந்தியத் தொழில்துறையின் சமகாலச் சாதனையாளர்களில் முக்கியமானவர். திருபாய் அம்பானிக்குப் பிறகு ரிலையன்ஸின் முகமாக முகேஷ் அம்பானி மாறிப்போனார். ரிலையன்ஸ் என்கிற மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியதில் முகேஷ் அம்பானியின் பங்களிப்பு முக்கியமானது. தொழிலா கல்வியா என்னும் கேள்வி வந்தபோது, தொழிலைத் தேர்ந்தெடுத்து கல்வியை இடையில் உதறினார். தன் தந்தையுடன் இருந்து அவர் கிரகித்துக்கொண்ட பாடங்களை எந்தப் பல்கலைக்கழகத்தில் இருந்திருந்தாலும் அவரால் கற்றுக்கொண்டிருக்கமுடியாது.ரிலையன்ஸ் வளர்ந்துகொண்டிருந்த சமயத்தில் ஏற்பட்ட இடைஞ்சல்கள், அரசியல் சவால்கள், கவிழ்ப்பு முயற்சிகள் அனைத்தையும் சமாளிக்க தன் தந்தைக்குப் பக்கபலமாக இருந்தார் முகேஷ். மகனின் உழைப்பில் அசந்துபோய் திருபாய் அம்பானியே முகேஷின் காதல் திருமணத்துக்கு ஏற்பாடு செய்தார் என்பது முகேஷின் சுவாரசியப் பக்கங்களில் ஒன்று.திருபாய் அம்பானிக்குப் பிறகு ரிலையன்ஸை ஆளப்-போகிற-வர் முகேஷ் அம்பானிதான் என்று அனைவரும் நினைத்திருந்த தருணத்தில், வீட்டுக்குள் இருந்து கலகம் செய்தார் முகேஷின் தம்பி அனில் அம்பானி. ரிலையன்ஸின் கோட்டையில் விரிசல் விழ ஆரம்பித்தது. தன் சகோதரருக்காக தன் உரிமைகளைப் பகிர்ந்துகொண்டு பெரிய சரிவு எதுவும் ஏற்படாமல் ரிலையன்ஸை காப்பாற்றினார் முகேஷ்.முகேஷ் அம்பானி பற்றி எழுதப்படும் முதல் நூல் இதுவே. முன்னதாக, என். சொக்கன் எழுதிய திருபாய் அம்பானியின் வாழ்க்கை வரலாறு ஒரு சூப்பர் ஹிட் புத்தகம்.
Tags: , என். சொக்கன், முகேஷ், அம்பானி-Mukesh, Ambani