நாகூர் ரூமி என்ற பெயரில் எழுதும் ஏ. எஸ். முகம்மது ரஃபி தமிழக எழுத்தாளர். ஆம்பூரில் மஸ்ஹரூல் உலும் கல்லூரியின் ஆங்கிலப் பேராசிரியராகவும் துறைத்தலைவராகவும் பணியாற்றிய இவர் கம்பனையும் மில்டனையும் ஒப்பாய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். கவிதை, கட்டுரை, நாவல், குறுநாவல், சுய முன்னேற்றம் வாழ்க்கை வரலாறு, ஆன்மிகம், மொழியாக்கம் என் பல்வேறு துறைகளிலும் இதுவரை 51 நூல்களை எழுதியுள்ளார். இவற்றில் ஒன்பது நூல்கள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டவை.
தமது குட்டியாப்பா எனும் சிறுகதைத் தொகுப்பு மூலம் தமிழ் இலக்கிய உலகில் கவனம் பெற்றார். இந்தத் தொகுப்பு கேரளப் பல்கலைக்கழகத்தில் முதலாண்டு மாணவர்களுக்கு பாடப்புத்தகமாக வைக்கப்பட்டுள்ளது. திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் தமிழ்த்துறையிலும் குட்டியாப்பா தொகுதியிலிருந்து பத்து கதைகள் தமிழிலக்கியம் பயிலும் மாணவர்களுக்கு பாடமாக வைக்கப்பட்டுள்ளது. நாகூர் ரூமியின் படைப்புகள் என்ற தலைப்பில் நஸ்ரீன் என்பவருக்கு சென்னை புதுக்கல்லுரியில் நடந்த நேர்முகத்தேர்வில் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். குட்டியாப்பா உட்பட நாகூர் ரூமி எழுதிய 33 சிறுகதைகளையும், 6 குறு நாவல்களையும் கொண்ட தொகுப்பு இது. இவை கணையாழி, கல்கி, ஆனந்த விகடன், குமுதம், குங்குமம் போன்ற இதழ்களில் வெவ்வேறு காலகட்டங்களில் பிரசுரமானவை.
ஒரு சாதாரன பேருந்துப் பிரயணத்தையும், வாழ்வின் ஆகப்பெறும் துயரையும், சந்தோஷத்தையும், பிரிவையும், வலியையும் ஒருவிதமான சுய எள்ளல் தொனிக்கும் இலக்கிய ஒப்பீடுகளுடன், பாமரத்தனமான நடையில் கதை சமைக்கத் தெரிந்த ரசவாதி நாகூர் ரூமி. எந்த ஒரு வரியிலும் அவரது மும்மொழிப் புலமையோ, இலக்கிய பாண்டித்தியமோ துருத்திக்கொண்டு தெரியாமல் கதைமாந்தரின் எண்ண ஓட்டத்தை பிரதிபலிக்கும் பாங்கு அசோகமித்ரன், சுஜாதா போன்ற ஜாம்பவான்களால் வெகுவாகப் பாராட்டப் பெற்றது.
Tags: nagore, rumi, kadhaigal, நாகூர், ரூமி, கதைகள், நாகூர் ரூமி, வானவில், புத்தகாலயம்