தமிழகத்தில் நவீன ஓவியத்தைப்பற்றிய புரிதல் மிகக்குறைவு. கல்விக்கூடங்களிலும்
ஊடகங்களிலும் இது பற்றிய பேச்சே இல்லை.. ஓவியம் என்றாலே உருவக சித்தரிப்பு என்று பொதுப்புத்தியில் உறைந்து விட்டது. இந்த பின்புலத்தில் தான் நாம் மோனிக்காவின் இந்த நூலை வரவேற்க வேண்டும்.
மேற்கத்திய ஓவியங்களை தமிழ் வாசகர்கள் எளிதாக உள்வாங்கக் கூடிய நடையில், அறிமுகப்படுத்துகின்றார். நம் நாட்டு பாரம்பரிய ஓவியங்களுக்கும் மேற்கத்திய ஓவியங்களுக்கும் ஒரு வேறுபாடு உண்டு. அவை உருவநியதிகளால் (iconography) கட்டுப்படுத்தப்படவில்லை. சமயம் சார்ந்த கட்டுப்பாடுகள் அந்நாட்டு கலைஞர்களுக்கு இல்லை. இதனால் அங்கு ஓவியர்கள் எல்லையற்ற சுதந்திரத்தில் இயங்கினார்கள். புரவலர்களும் கலைஞர்களுக்கு மிகுந்த சுதந்திரத்தை அளித்திருந்தனர்’. அவர்கள் உருவாக்கிய படைப்புலகப் பாதையில் பயணித்த இந்திய ஓவியர்களைப்பற்றி எழுதுகின்றார். இந்தப்பாதிப்பில் புதிய கருத்தாக்கங்கள், பாணிகள் உருவாகின. அவற்றை விளக்க ஆசிரியர் கலைச்சொற்களைக் கச்சிதமாக பயன்படுத்துகின்றார். வண்ண ஒவியங்களும் கோட்டோவியங்களும் துல்லியமாக அச்சிடப்பட்டிருக்கின்றன. புத்தகத்தை படிக்கும் போது, படங்களை பார்க்கும் போது ஒரு கவின்மிகு ஓவியக் கண்காட்சியை காணும் அனுபவம் கிடைக்கின்றது.
- தியடோர் பாஸ்கரன்
Tags: naveena, india, oviyam, நவீன, இந்திய, ஓவியம், மோனிகா, எதிர், வெளியீடு,