சுழித்தோடும் இந்நதியின் நீர்ப்பரப்பினூடாய் கசியும் வாசத்தில் பசபசப்பான குறுமணல்கள் கொண்டிருக்கும் நிச்சலனம். மூன்று தினங்களாய்ப் பெய்தோய்ந்த பெருமழைக்குப் பின்பாக தளிர்த்திருக்கும் கரையோர நாணல்களின் பச்சையினூடாய் சகதிக்கால் நகர்த்தி வந்துகொண்டிருக்கிறான் அவன். மாதங்களுக்கு முன்பாய் நீர்வரத்தற்றுப்போய் ஆள்நடமாட்டம் இன்றி நாதியற்ற இக்கரையில் ஓடுகளாய் எஞ்சிய நண்டுகளையும் சிப்பிகளையும் பொறுக்கி சகதிநீர் ஊறும் சிறு சிறு நீர்பரப்பில் விட்டு வந்திருந்தான். எப்படியும் வாய்க்கும் உயிர்ப்பென்னும் நம்பிக்கையுடன். நீரூட்டம் பெருகுவதற்கு சமீபமான தினங்களில் தன் வீட்டின் பால்கனி முகப்பிலிருந்து வினோதமான உருவங்களின் அசைவுகளை நதியில் கவனித்தவனுக்கு உறக்கமின்மை வளர்ந்தது. முதலில் நாளுக்கு சில மணிநேரங்கள் எனவும் பின் வெகு வேகமான தீவிரத்தில் பெருகிய உறக்கமின்மை சில நிமிடங்களுக்கான உறக்கத்தினை மட்டுமே தந்து அவனை கபளீகரம் செய்திருந்தது.
கொம்புகள் சூடுவைக்கப்பட்ட உழவுமாடுகளின் அசைவற்ற கண்கள், நாள்பட்ட ரோகிகளின் நாற்றம் பீடித்தத் தாவரங்கள், கடல் கடந்த தேசத்தின் தேக்கு மரங்களின் ஆவி குடித்த நூற்றாண்டு கால கட்டில் நாற்காலிகளை அவ்வறை நிராதரவானதொரு வெளியாய் மாற்றிக் கொண்டிருந்தது, நதிநீர் அவனுறக்கத்தில். உறங்கி விழிக்கிற கனங்கள் தோறும் அதிர்ச்சியுற்றவனாய்த் தம் படுக்கையிலிருந்து எழுந்தோடி வருபவன் கண்சாட்சியாய்க் கண்டும் நம்ப இயலாதவனாயிருந்தான் அவ்வூரின் இருப்பை.
சிதைவுகளின் நெடியப்பிய புளிப்பு மனிதனாய் முழுக்க நீர்மை படர்ந்துவிட்டிருந்தது மேனியில். முடிவுறாத கனவுகளின் நீள்நாவுகள் விருப்பத்துடன் வருடியதில் இளஞ்சூடாய் பரவிப்பெருகியது நஞ்சு. தனக்காக கிடத்தப்படும் படுக்கையில் நெடுநாள் பாதுகாக்கப்படும் சவத்தின் துர்வாடையினையும் ஸர்ப்பங்கள் புணர்கையில் வெளிப்படும் மூர்க்கமும் பின்னிக்கிடந்ததாய் உணர்ந்தவனுக்கு கைவிரல்கள் மெலிந்து உதிரம் கட்டிப்போயிருந்தது. புதுவகையான நோயெனக் கருதி மேற்கொண்ட வைத்தியத்தில் மருந்துகள் கொடுக்க முடிந்ததெல்லாம் மிகுதியான தளர்வினையும் உடல்நடுக்கத்தினையும்தான்.
நாற்பது வயதிற்கு சமீபமாய் வந்திருந்தவனின் மயிர்க்கற்றைகள் இயல்பிற்கதிகமாய் நரைத்துப் பூத்திருந்தது. தனித்துவமான உடல் வாசனையென சொல்ல முடியாத அவனின் கபாலத்தில் மட்டும் நாகலிங்கப் பூக்களின் மகரந்த வாசனை. நிறமும் கூட பூர்ணமான வெள்ளையின் ஊடுபரவலாய் மெல்லிய பொன்னிறமாகவே இருந்தன மயிர்கள். ஊரில் எஞ்சிப்போயிருக்கும் கடைசிக் குதிரைக்காரன் முத்துக்கிழவனின் வண்டியில் போட்டு வைத்தியத்திற்கு அழைத்துப்போன நாட்களில் திரும்பி வரும் வரையிலும் அவ்வூர் பாதுகாப்பாய் இருக்குமென உறுதியில்லை அவனிடம். அரைமனதாய் சம்மதித்துச் சென்றவன் சிலமுறைகளுக்குப் பின்பு தனக்குக் குணப்படுத்தும்படியான நோய் எதுவுமில்லையென எங்கும் வர மறுத்துவிட்டிருந்தான். அபரிமிதமான சிதைவினை வெளிக்கொண்டிருப்பது தேகமாயிருப்பினும் அவனை வருத்திக் கொண்டிருப்பது மனமாக மட்டுமேயிருக்க முடியுமென நிச்சயமாக நம்பினர் வீட்டில். சில தினங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டன வைத்யமும் மருந்துகளும். அவனுக்காக வாங்கி வைக்கப்பட்டிருந்த பச்சைநிற லேகியங்கள் பாதி பயன்படுத்தப்பட்டு நிறம்மாறி நீலமாகிப்போயிருந்தது.
Tags: neela, nathi, நீலநதி-Neela, Nathi, பிரபஞ்சன், கவிதா, வெளியீடு