நம்முடைய கலாசாரத்தையும் பண்பாட்டையும் பாதுகாத்து வளர்ப்பதில் திருக்கோயில்கள் ஆற்றிவரும் திருப்பமிகள் ஏராளம். பன்னிரு திருமுறை பாடி நாயன்மார்கள் வழிபட்ட சிவத்தலங்கள்; வைணவ ஆழ்வார் பெருமக்கள் 'நாலாயிர திவ்வியப் பிரபந்த' பாசுரங்களைப் பாடிப் பரவசப்பட்ட வைணவ திவ்விய தேசங்கள், இன்னும் முனிவர்கள், சித்தர்கள், ஞானிகளால் பாடல் பெற்ற பழம்பெரும் தலங்கள் எத்தனையோ! எல்லோரும் எல்லாத் தலங்களுக்கும் சென்று தரிசிப்பது என்பது இயலாத காரியம்.
அதை மனதில் கொண்டுதான், பல வகையிலும் முக்கியத்துவம் வாய்ந்த _ ஆனால், வாசகர்கள் அதிகம் பார்த்திராத திருத்தலங்கள் பற்றி அவள் விகடனில் 'நிம்மதி தரும் சந்நிதி' என்ற தலைப்பில் ஆன்மீகத் தொடர் ஒன்றை வண்ண ஓவியங்களுடன் வெளியிட ஆரம்பித்தோம்.
இந்தத் தலங்களுக்குச் சென்ற் பயண அனுபவங்களைப் புராணக் கதைகளுடன், கர்ண பரம்பரைத் தகவல்களையும் இணைத்து ஒழுங்குபடுத்தி, கிருஷ்ணானந்த சுந்தர்ஜி கட்டுரையாக வடித்துத் தந்தார். பழம்பெருமை வாய்ந்த கோயில்களின் கம்பீரமான ராஜகோபுரங்கள், புதுமையான விமானங்கள், கலைத்தூண்களில் காணப்பட்ட மனதைக் கொள்ளை கொள்ளும் கலைநயம் மிக்க சிற்பங்கள் ஆகியவற்றைத் தன் கைவண்ணம் மூலம் வாசகர்களின் கண்முன்னே தத்ரூபமாகக் கொண்டுவந்து காட்டினார் தூரிகைச் சித்தர் பத்மவாசன். மறைந்த ஓவியமேதை 'சில்பி'யின் ஆத்மார்த்தமான சீடரான பத்மவாசன், பல நாட்கள் பசி, தூக்கம் மறந்து, ஆழ்ந்த ஈடுபாட்டுடன் ஓவியங்களை வரைந்து தந்ததை மறக்க முடியாது.
பிரதோஷம், பெளர்ணமி, அமாவாசை, குரு_ராகு_சனி_கேது பெயர்ச்சிகள் போன்ற விசேஷ சந்தர்ப்பங்களில் ஆன்மீக அன்பர்கள் திருவண்ணாமலை பெளர்ணமி கிரிவலம், சுருட்டப்பள்ளி பிரதோஷம், திருவக்கரை வக்ரகாளி பெளர்ணமி ஜோதி, குரு_ராகு_சனி_கேது கிரகப் பரிகாரத் தலங்களை நாடிச் சென்று மனநிம்மதி பெறுகின்றனர். தங்களின் குடும்ப நலனுக்காக மனம் உருகி வேண்டுகின்றனர். இதை மனதில் கொண்டு, அந்தத் தலங்களைப் பற்றி முழு விவரங்களையும் கட்டுரைத் தொடரில் இடம்பெறச் செய்தோம்.
'இந்தத் தொடரில் வெளியான கட்டுரைகளைத் தொகுத்து, ஒரு புத்தகமாக வெளியிட வேண்டும்' என்ற வாசகர்களின் ஏகோபித்த கருத்தின்பேரில், இப்போது புத்தகமாக உங்கள் கையில் தவழவிடுகிறேன்.
இந்தப் புத்தகத்தை வாங்கிப் படித்துப் பயன் பெறுவதோடு, உங்கள் இல்லத்திலும் வைத்துப் பாதுகாத்தால், வளர்ந்துவரும் இளைய தலைமுறையினருக்கும், வாழ்க்கைக்குச் சிறந்த வழிகாட்டியாக அமையும் எனத் திடமாக நம்புகிறேன்.
நிம்மதி தரும் சந்நிதி (பாகம் 1)
- Brand: கிருஷ்ணானந்த சுந்தர்ஜி
- Product Code: விகடன் பிரசுரம்
- Availability: In Stock
- ₹80
-
₹68
Tags: nimmathi, tharum, sannithi, part, 1, நிம்மதி, தரும், சந்நிதி, (பாகம், 1), கிருஷ்ணானந்த சுந்தர்ஜி, விகடன், பிரசுரம்