"ஊரெல்லாம் சிவமணம்" என்ற இம்மூன்றாம் தொகுதியில் இரண்டாம் தொகுதியில் சேர்க்க முடியாத தொண்டை மண்டலம், கொங்கு மண்டலம், சென்னை நகரில் உள்ள சைவ மன்றங்களின் வரலாறும், சைவப் பணிகளும் தொகுத்து விளக்கப்பட்டுள்ளன. இந்நூலின் தொகுதியின் - அவசியம் பற்றிச் சிலர் கேள்விகள் எழுப்பினார்கள். தமிழர்களுக்கு வரலாற்று உணர்வு என்பதே கிடையாது. அதுவும் அவர்கள் வாழும் காலத்து நிகழ்வுகளைப் பதிவு செய்வதே கிடையாது என்ற குற்றச்சாட்டு ஒருபுறம் உள்ளது. அப்படியிருக்கும்பொழுது நாம் வாழுகின்ற இக்காலத்தில் உள்ள சைவ சமய நிலையினை இத்தொகுதி ஓரளவு நிறைவேற்றுகிறது. இரண்டாவதாக தமிழகத்தில் பல அமைப்புகளின் - தொண்டர்களின் - ஆன்றோர்களின் பணிகள் அவர்கள் வாழும் பகுதிகளைத் தாண்டி வெளியே தெரிவதில்லை. களிமேடு அப்பர் விழா, சின்னமனூர் மாணிக்கவாசகர் கோயில், ஒரு காலத்தில் சிவராஜ தானியாக விளங்கிய மஞ்சக் கொல்லை, ஒரு கிராமத்தில் வாழும் பள்ளிப்படிப்பே அறியாத மாபெரும் சித்தாந்த அறிஞர் சிவம் ஐயா, வெட்டுவாணம், சென்னை மன்றங்களில் காணப்படும் அற்புத ஓவியங்கள் - இவையெல்லாம் ஒரு சில எடுத்துக் காட்டுகளே. இவையெல்லலாம் தமிழ்கூறு நல்லுலகிற்கு வெளிப்படுத்தப் பட்டுள்ளன. ஏன்? நூறாண்டுகளுக்கு மேலாக இன்றும் செம்மாந்து பணியாற்றி வரும் சைவச்சித்தாந்தப் பெருமன்றத்தின் முழு வரலாறு முழுமையாகத் தொகுக்கப்பட்டு எழுதப்படவில்லை.