சமூக மாற்றத்தில் தமிழ்நாடு பெற்றிருக்கும் வளர்ச்சிக்கு மிக முக்கியக் காரணமாக விளங்கியவர் தந்தை பெரியார். ஏழ்மையான சூழ்நிலையில், ஒரு விதவையிடம் தத்துக் குழந்தையாக வளர்ந்த பெரியார், ஒன்பதாவது வயதில் தன் வீட்டுக்கு தந்தையால் அழைத்து வரப்பட்டார் என்று தொடங்குகிறது அவரது வரலாறு. ஒரு திரைப்படம் நம் கண்முன் விரிவது போல பெரியாரின் வாழ்க்கை தொடர்பான சம்பவங்கள் பலவற்றை இந்த நூலில் விவரித்துக் காட்டுகிறார் நூலாசிரியர் அஜயன் பாலா. கேலியும் கிண்டலுமாகப் பேசி, மண்டி வியாபாரத்தில் சாமர்த்தியமாக தன்னை விஞ்சுவது கண்டு நெகிழ்ந்த தந்தை வெங்கட்ட நாயக்கர், ஐந்துமாத பெண் குழந்தை இறந்த துக்கத்தால் வாடிய பெரியாரின் மனதைப் புரிந்துகொள்ளாமல், வெற்றிலை எச்சிலால் பலர் முன்னிலையில் முகத்தில் உமிழ்ந்து அவமானப்படுத்தியதையும்... காசியில் கடும் பசியில் நண்பர்களோடு விருந்துக்குச் சென்ற பெரியாரை சாதி பிரச்னை காரணமாக தடுத்து உள்ளே விட மறுக்க, பசியின் கொடுமையால் எச்சில் இலைமுன் அமர்ந்து வயிறு நிறைத்ததையும் படிக்கும் போது பெரியார் என்ற மாமனிதருடன் வாழ்ந்த அனுபவம் ஏற்படுகிறது. காந்திய கொள்கையால் ஈர்க்கப்பட்டு, ஆங்கிலேயரை எதிர்த்து, தான் வகித்து வந்த 29 பதவிகளையும் துறந்து கதராடைக்கு மாறிய பெரியார், சாஸ்திர சம்பிரதாயங்கள் எல்லாம் போலியானவை என நிரூபிக்க, தன் மனைவியின் கழுத்தில் கிடந்த தாலியை கழற்றித் தன் சட்டைப் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு திரிந்த நிகழ்ச்சிகளை எல்லாம் சூடாகவும் சுவையாகவும் வர்ணிக்கிறார் நூலாசிரியர். பிரச்னையை எதிர்கொள்ளும் துணிச்சலும், இடைவிடாத போராட்டமும் பெரியாரை விட்டுப் பிரியாதவை. அன்றைய சமுதாயத்தில் நிலவிவந்த மூடத்தனங்களை எதிர்த்த பெரியார் பற்றிய வரலாற்றைப் படிக்கப் படிக்க எதையும் சாதிக்கிற சக்தி மனதுக்குள் பீறிடும். எவரிடத்திலும் சமரசம் செய்துகொள்ளாத வீரத்தையும், அதேசமயம் எதிர் கொள்கை உடையவர்களை மதிக்கும் பண்பையும் பெற்றிருந்த பெரியாரின் வரலாறு ஆனந்த விகடனில் நாயகன் தொடர் வரிசையில் வெளிவந்தபோதே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நூல் அந்தக் கட்டுரைகளின் தொகுப்பே.
Tags: periyaar, பெரியார், அஜயன் பாலா, விகடன், பிரசுரம்