வேளாண்மை என்பது ஒரு வாழ்க்கை. அது தொழில் அல்ல. காவிரி பாயும் தஞ்சை மாவட்டத்தில் வாழ்க்கையே வேளாண்மை யாக இன்னும் இசைந்து போகிறது. பல நூற்றாண்டுகளாக இழையறாமல் இருந்து வந்த அந்த முறை சுமார் எழுபதாண்டு களுக்கு முன்னால் தன் நிலையை இழக்க ஆரம்பித்தது. அதனால் வேளாண்மை தொழிலாகியது. பிறகு லாபம் ஈட்டும் தொழிலாக மாறியது. விளை நிலத்தில் பணப்பயிர்கள் கால்கொள்ள ஆரம்பித்தன. சாயாவனத்தில் பிறந்து பிழைப்புக்காக வெளிநாட்டிற்குத் தாயுடன் சென்றவன் கையில் கொஞ்சம் பணத்தோடு உலக நடப்புகளைத் தெரிந்து கொண்டு தன்னூருக்கு வருகிறான். வனம் போன்றிருந்த நிலத்தை வாங்கி தனது இலட்சியத்தை அடைய முயற்சி செய்கிறான். சமூக மாறுதல் என்பதை ஒரு இழையாகவும் வாழ்க்கை என்பதை இன்னோர் இழையாகவும் கொண்டது சாயாவனம். காவிரி கடலோடு கலக்கும் பூம்புகாருக்குப் பக்கத்தில் உள்ள ஊர் சாயாவனம். மரம் செடி கொடிகள் நிறைந்தது. எனது இளம் பருவம் பூம்புகாரிலும் சாயாவனத்திலும் கழிந்தது. எனவே சாயாவனத்தை நாவலுக்கு உகந்த இடமாகக் கொண்டேன். சாயாவனத்தில் கரும்பு ஆலை ஏற்படவில்லை. வனம் போன்ற காடு அழிக்கப்படவில்லை. ஆனால் தஞ்சை மாவட்டத்தில் நிகழ்ந்த மாறுதலின் அடையாளமாக சாயாவனம் விளங்குகிறது. 1964-இல் ஒரு முப்பது நாள்களில் எழுதி முடிக்கப்பட்ட நாவல், பிறகு ஆண்டிற்கு ஒரு முறையென மூன்று முறை மறுபடியும் மறுபடியும் எழுதப்பட்டது. பெரிய மாறுதல் ஒன்றும் இல்லை. இருந்தாலும் எழுதுவது, மறுபடியும் எழுதி நேர்த்திப் படுத்துவது மனத்திற்குப் பிடித்தமாக இருந்தது. நாவல் சிறுகதை என்று எழுதி வெளியுலகத்திற்கு அதிகமாக அறியப்படாது இருந்த நேரத்தில் முதல் நாவலான சாயாவனத்தை ஏற்று உன்னதமான முறையில் வாசகர் வட்ட வெளியீடாகக் கொண்டு வந்தவர் திருமதி. லட்சுமி கிருஷ்ணமூர்த்தி முன்னோக்கிய அச்செயல் இன்னும் தீவிரமாக இலக்கிய முயற்சியில் ஈடுபாடு கொள்ள ஒரு காரணமாக அமைந்தது. அவருக்கு இப்போது நன்றி சொல்வது சாலவும் பொருந்தும்.
Tags: saayavanam, சாயாவனம்-Saayavanam, சா.கந்தசாமி, கவிதா, வெளியீடு