இது ஒரு வித்தியாசமான பக்தி நுால். அம்பிகையோடு நுாலாசிரியரே உரையாடுவது போன்று அமைந்திருப்பது புதுமையானது. அம்மன் மீது அளவிலாப் பக்தியைக் கொண்டிருப்பவர்களைப் பரவசப்படுத்தும்படியான நுால்.
தாயினும் சாலப்பரிந்து, கோலக்கிளியே சரணம், பாலா திரிபுரசுந்தரி, யாதுமாகி நின்றாய், நீயும் நானும் வேறில்லை ஆகிய ஐந்து தலைப்புகளைக் கொண்டிருக்கும் இந்நுால். அம்பிகையை வினாவுவதாகவும், அவளே நேரடியாகப் பச்சைப் புடவைக் காரியாகக் காட்சி தந்து, நுாலாசிரியரின் ஐயங்களைத் தடை விடைகளால் விளக்குவதாகவும் அமைந்திருக்கிறது.
அம்பிகையின் புறத் தோற்றத்தை இன்றைய நடைமுறை உலகில் உலவ விட்டிருக்கும் ஆசிரியர், அக உணர்வுகளை அற்புதமான நடையில் வெளிப்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது.
அம்பிகையை அற்புதமாக அழகு தமிழில் எடுத்துரைக்கும் லலிதாம்பிகை தோத்திரம், அபிராமி அந்தாதி ஆகியவற்றையும், பாரதி கண்ணதாசன் ஆகியோர் தேவியரை வியந்து பாடியதையும் ஆங்காங்கே எடுத்துரைத்து விளக்கம் சொல்லியிருப்பது போற்றுதற்குரியது.
பாரதிதாசன், ஜலாலுதீன் ரூமி பாடல்களை எடுத்தாண்டிருப்பது சிறப்பு. நடையழகு மிளிர அழகிய வருணனையில் பக்கங்கள் தோறும் பக்தி ரசம் கனிகிறது.
அம்பிகையைக் கண்ணனாகக் காட்டியிருப்பது புதுமை. அதேசமயம் அது ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்று தானா என்ற தடை விடைகளை வைணவப் பக்தர் ஒருவரின் உரையாடல் மூலம் வினாவுவதும், அம்பிகையே அதற்கான விளக்கத்தை ஓரிடத்தில் விரித்துரைப்பதும் பொருந்த அமைந்துள்ளன.
இறை வடிவங்களைத் தாண்டி நிற்கும் அன்பே தெய்வம் என்ற கருத்தாக்கம், பாராட்டக்கூடியது. இறைவன் ஒருவனே என்ற தத்துவத்தின் நகர்வில் நகர்ந்து செல்லும் இந்நுால், பக்தியில் கரையும் அன்பருக்கு மிக்க மகிழ்ச்சியூட்டும் என்பது உறுதி.
– ராமகுருநாதன்
சொல்லடி சிவசக்தி-Soladi Sivasakthi
- Brand: வரலொட்டி ரெங்கசாமி
- Product Code: கவிதா வெளியீடு
- Availability: In Stock
-
₹200
Tags: soladi, sivasakthi, சொல்லடி, சிவசக்தி-Soladi, Sivasakthi, வரலொட்டி ரெங்கசாமி, கவிதா, வெளியீடு