படைப்பு மனம் கொண்டவர்களின் வாழ்வனுபவம் அலாதியானது. நினைவுப் பாதையைக் கடக்கும்போது கிடைக்கும் நெகிழ்ச்சிக்கு அளவே இல்லை. கலாப்ரியா வாழ்விலும் எத்தனை நெகிழ்ச்சி... எத்தனை மனிதர்கள்... எத்தனை அபூர்வங்கள். கவிஞர் கலாப்ரியா, மண் சார்ந்த கவிதைகளின் கர்த்தா. அவர் சார்ந்த தெற்கத்தி சீமையில் தாமிரபரணிக் கரைகளை மனதால் தழுவிச் செல்கின்றன கலாப்ரியாவின் வரிகள். பிரபஞ்சன் சொல்வது போல, கலாப்ரியாவின் மன வயல்களில் தாமிரபரணி நதி பாய்ந்து அவரைச் செழுமைப்படுத்திக் கொண்டிருக்கிறது, இன்னமும். கவிஞர்கள் பொதுவாக, வார்த்தை ஜாலம் கொண்டவர்கள். வர்ணனையில் கைதேர்ந்தவர்கள். ஆனால், பெருவரி கொண்டு கட்டுரை வடிப்பார்களா என்பது ஐயமே. இந்த ஐயத்தை உடைத்தெறிந்திருக்கிறார் கலாப்ரியா. ‘நினைவின் தாழ்வாரங்கள்’ மூலம் தனது இளம்பிராயத்து நினைவுகளை நம் மன அடுக்கில் நிலைநிறுத்தியவர் கலாப்ரியா. அதற்கு அடுத்தபடியாக இந்த ‘உருள் பெருந்தேர்’ கட்டுரைத் தொகுப்பு கவனத்தை ஈர்க்கும் விதத்தில் அமைந்துள்ளது. எழுத்துலக முன்னோடிகள் பிரபஞ்சன், ஜெயமோகன் முன்னுரையில் சொன்னபடி, இந்நூலில் நம்மை வசப்படுத்துகிறார் கலாப்ரியா. இந்த கட்டுரைத் தொகுப்பில் வண்ணமயமான மனித உள்ளங்கள்... மனதை வருடும் இடங்கள் என அனைத்திலும் ஊடுருவி தன்னுடைய இருப்பை வார்த்தைகளில் உணர்த்தியிருக்கிறார். இந்த நூலை வாசிக்கும்போது நாமும் நம் கடந்த காலத்தை நோக்கி பயணிப்போம். ரசிப்போம். சுவைப்போம். நம் கண்களில் இருந்து ஒரு துளி கண்ணீர் தரையைத் தொடும். நெஞ்சாங்கூடு நிறையும். வாருங்கள்.. கலாப்ரியாவோடு பயணிப்போம்.
Tags: urul, perunther, உருள், பெருந்தேர், கலாப்ரியா, விகடன், பிரசுரம்